Monday, 17 December 2018

நலமுடன் வாழ்வோம்


"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்"
 .
வள்ளுவனின் வாக்கில்  சொன்னது போல நமது உடலில் நோய் வந்த பின் அதற்கு வைத்தியம் செய்து நொந்து நூலாவதைவிட , அது வராமல் காப்பதே சிறந்தது.  நம்  உடல் நலம் பேண நம் சித்தர்கள் நாம் கடைப்பிடிக்க சில நடைமுறைகளை சொல்லியுள்ளனர்.

இரண்டு எனும் மந்திரம்
தினம் இரண்டு,
வாரம் இரண்டு,
மாதம் இரண்டு,
ஆண்டுக்கு இரண்டு
 . 

தினம் இரண்டு:

தினமும் இரு வேளையும் மலஜலம் கழிக்க வேண்டும்.
காலை, மாலை என இருமுறை மல ஜலம் கழிப்பதால் நோய்கள் அணுகாது.
நல்ல பசியும் எடுக்கும்.


வாரம்இரண்டு ;

வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையே ( புதன் மற்றும் சனிக்கிழமை) குறிப்பிட்டனர்.
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று ஒரு பழமொழி உண்டு.
உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் உடல் சூடுதான்.எண்ணெய் தேய்த்துக் குளிப்பதனால் உடலில் சூடு அதிகம் ஆகாது.
கண்களில் எரிச்சல் ஏற்படாமல் பார்வை தெளிவாக இருக்கும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி ?
உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய்  பயன்படுத்தலாம்.  மேற்படி எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக
நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காகப் பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால், உடல் பழகிவிடும். மேற்கூறிய தொந்தரவுகள் விலகிவிடும்.

தலை முதல் உள்ளங்கால்வரை நன்கு பரவலாக எண்ணெயைத் தேய்க்க வேண்டும். உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் சற்றுப் பொறுமையாக வட்ட வடிவில் தேய்த்தால், உள்ளுறுப்புகள் வெப்பத்தைச் சரிவரப் பராமரிக்கப்படும். மேலும் மூட்டுகளுக்கு நெய்ப்புத் தன்மையையும் கொடுக்கும். . எண்ணெய் தேய்த்து வெகு நேரம் காத்திருக்கக் கூடாது. கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம்வரை, காலை இளம் வெயிலில் நின்ற பிறகு மிதமான சூடுடைய வெந்நீரில் குளிக்கவும். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர்ச்சியால் சளி பிடித்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் உறக்கம் கூடவே கூடாது. ஏனென்றால் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக அதிகரித்த உடல் சூடு வெளிவரும், முக்கியமாகக் கண்களின் வழியாக வரும். இதைப் பகல் தூக்கம் தொந்தரவு செய்யும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்மையான உணவு வகைகளான தயிர், குளிர்பானம், நீர் காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்க்கவும். பதிலாக மிளகு ரசம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

மாதம்இரண்டு:

மாதத்தில் இரண்டு நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும்.
ஒன்று கிருத்திகை மற்றொன்று ஏகாதசி .
கிருத்திகை முருகருக்கும், ஏகாதசி அன்று நாராயணனுக்கும் விரதம் இருக்க வேண்டும். இதன்மூலம் நமது ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது, அவை நன்றாக செயல்பட ஏதுவாகிறது.

திருமணம் ஆனவர்கள், தாம்பத்ய உறவு மாதம் இருமுறை வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகம் போகம் கொள்வது கூடாது.
விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்று ஒரு பழமொழி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆண்டுக்குஇரண்டு :

என்பது பேதிக்கு சாப்பிட வேண்டும்.
சித்த வைத்தியத்தில் இது முக்கியமாக வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது

 பேதி மருந்து எப்படி சாப்பிடவேண்டும்?
முழுமையான ஓய்வு இருக்கும் நாளில்தான் இந்த பேதி மருந்து சாப்பிடவேண்டும். என்னை குளியல் செய்த மறுநாள் இதை செய்வது உத்தமம். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே பேதி மருந்து (விளக்கெண்ணெய்/கடையில் கிடைக்கும் மாத்திரை) சாப்பிடவேண்டும். மதியம் வரையோ அல்லது உடல் கழிவுகள் நீங்கும் வரையோ பேதியாகும். நீண்டநேரம் பேதி நிற்கவில்லையென்றால் சிறிது கல் உப்பு போட்டு மோர் பருகவும். அதன் பின்பு குளித்துவிட்டு, குழைவாக காச்சிய சோறுடன் தக்காளி ரசம் வைத்து காரமில்லாமல் சாப்பிடவேண்டும்.
உடலில் சேர்ந்துள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகும்.

இந்த வழிகளை பின்பற்றி நலமுடன் வாழ்வோம் !

No comments:

Post a Comment

தங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன