எண்ணங்கள் வலிமைபெற…
நம்மிடம் இருக்கும் சக்திவாய்ந்த , மிகவும் மதிப்புமிக்க
சொத்து நம் எண்ணங்கள்தான் , அதனை முறையானபடி பயிற்றுவித்தால் அனைத்தும் நம் வசமாகும்.
வளமாகவும், நலமாகவும் மகிழ்ச்சியோடும் வாழவேண்டும்
என்பதே நம் அனைவரின் ஆசையும், ஆனால் இதையெல்லாம் தீர்மானிப்பது நம் மனோபாவமே என்பது
பலரும் அறிந்திராத உண்மை.
நம் எண்ணங்களை வலிமைப்படுத்த முதலில் நமது மனோபாவத்தை
நேர்மறையாக (Positive Attitude) மாற்ற வேண்டும். அதற்கு கீழ் கண்ட சில வழிமுறைகளை பின்பற்றுவது
மூலம் நம் மனோபாவத்தை மாற்றலாம்.
- 1. தன்னம்பிக்கையை வளர்த்தல்
- 2. நேர்மறையாக சிந்தித்தல்
- 3. நேர்மறையாக பேசுதல்
- 4. மகிழ்ச்சியாக இருத்தல்
- 5. அன்புடனும் நன்றியுணர்வுடனும் இருத்தல்
- 6. தியானம்
1. தன்னம்பிக்கையை வளர்த்தல்
தன்னம்பிக்கையை வளர்க்கும்-சில வழிகள்:
உங்கள் தோற்றம் உங்கள் தன்னம்பிக்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. "ஆள்
பாதி ஆடை பாதி" என்பார்களே அது இந்த இடத்திற்கு மிகவும் தேவை.
உடைகள் ஒருவர் தன்னைப் பற்றி உணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள்
வெளித்தோற்றம் குறித்து உங்களை விட வேறு யாரும் அதிகம் கவலைப்பட போவதில்லை.
நீங்கள் நன்றாக உடையணியாவிட்டால், அது உங்களை மற்றவரிடத்தில் நீங்கள்
வெளிப்படுத்துவதில் மாற்றத்தை உண்டாக்கும்.
ஒருவரின் நடையை வைத்தே அவரின்
மனநிலையை கண்டறியலாம். தன்னம்பிக்கை உடைய நபர்கள் விரைவாக நடப்பார்கள். அவசரமில்லை
என்றாலும் அவர்களின் நடையில் ஒரு துள்ளல், வேகம் இருக்கும். தளர்வாக
நடத்தல்/உட்காருதல், மந்தமான அசைவுகள் தன்னம்பிக்கை இல்லாமையை வெளிப்படுத்துகிறது.
எப்போதும் நேராக நின்று/உட்கார்ந்து முகத்தை நேராக வைத்துக் கொண்டு
கண்ணுக்கு கண் பார்த்து பேச/கவனிக்க வேண்டும். இது நேர்மறை விளைவுகளை உண்டாக்கும்.
பள்ளிகள், கல்லூரிகள்,
அலுவலகங்கள், பொது உடங்களில் சிலர் முன் வரிசையில் உட்கார தயங்குவார்கள், இது
தன்னம்பிக்கை குறைபாட்டை காண்பிக்கிறது. முடிந்தவரை முன்னால் உட்காருங்கள்.
பல விவாதங்கள், பேச்சுக்கள், ஏன் சாதாரணமாக பொதுமக்கள் கூடி பேசுமிடத்தில்
கூட சிலர் பேசாமல் அமைதியாக கேட்க மட்டும் செய்வார்கள். தான் ஏதாவது பேசினால்
தன்னை குறைவாக மதிப்பிடலாம் என பயந்து பேசாமல் இருப்பார்கள். உங்கள் கருத்துக்கள்
தவறோ சரியோ தைரியமாக பேசுங்கள். மேற்கண்ட அனைத்தும் நம் மனநிலையின்
பெரும்காரணிகளாகும்
ஊக்கப்படுத்தும் கட்டுரைகளை படியுங்கள், பேச்சுக்களை கேளுங்கள். இது
தன்னம்பிக்கை உண்டாக்கும் முக்கிய வழியாகும்.
தினம்தோறும் உறுதிமொழி வாக்கியங்கள்
( Affirmations) சொல்லி பழகுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு எது தேவையோ, அதற்கேற்ற உறுதிமொழி வாக்கியங்களை
நீங்களே உருவாக்கி அதனை தினம்தோறும் முழுமனதோடு சொல்லிவர அது உங்கள் ஆழ்மனதில் பதிந்து
, பின் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற செய்யும்.
உறுதிமொழி வாக்கியங்கள் எப்படி இருக்க வேண்டும் ?
பொதுவாக
"நான்" என்ற வார்த்தை அகங்காரத்தை
குறிக்கும் என நம் முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர் , ஆனால் ஈர்ப்பு விதியில் உறுதிமொழி
வாக்கியங்கள் அமைக்க "நான்" என்ற
வார்த்தையே மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தையாகும்.
எனவே
வாக்கியங்கள் "நான்" என ஆரம்பிக்கவேண்டும். கண்டிப்பாக நிகழ் காலத்தில் இருக்க
வேண்டும். பொதுவாக கடவுளிடம் நாம் வேண்டுதல் வைக்கும்போது எதிர்காலத்திலேயே சொல்லுவோம்,
ஆனால் ஈர்ப்புவிதியில் நம் வேண்டுதல்கள் நம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைவதால்
, நம் வேண்டுதல்கள் நிறைவேறி விட்டதாகவும் அதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்வதாகவும் அமைய வேண்டும்.
தன்னம்பிக்கை உறுதிமொழி வாக்கியங்களில் சில ...
நான்
எந்த செயலையும் வெற்றிகரமாக செயல் படுத்தும் ஆற்றல் கொண்டவன்.
நான்
திறமையானவன்
நான்
எப்போதும் உற்சாகத்தோடு இருக்கிறேன்
நான்
மிகவும் ஊக்கத்தோடு இருக்கிறேன்
நான்
அனைவரும் பாராட்டும்படி நடந்து கொள்கிறேன்
என்பதுபோல
வாக்கியங்களை அமைத்து அதை தினம்தோறும் அதிகாலையில் சொல்லி வர வேண்டும்.
தன்னம்பிக்கை யின் சிறப்பை ஒரு சிறுகதை மூலம் அறிந்துகொள்வோம்.
முன்னோர் காலத்தில் மதுர நாடு என்றோரு நாடு இருந்தது, சில வருடங்களுக்கு முன்னர் அந்த நாட்டின் மன்னன் வாரிசு இல்லாமல் இறந்து போனான்.
இறக்குமுன் புதிய சட்டம் ஒன்றை இயற்றினான், "இனி இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் மன்னராகலாம் ! ஒருவருக்கு ஒரு வருடம் மட்டுமே பதவி காலம். பதவிக்காலம் முடிந்த மறுநாள் அந்த மன்னரை அந்த நாட்டின் அருகிலுள்ள கொடிய மிருகங்கள் வாழும் காட்டிற்குள் விட்டு விடவேண்டும் !, பலபேர் விருப்பப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவார். யாருமே மன்னராக முன் வராவிட்டால் மக்கள் அனைவரின் பெயரையும் குலுக்கி போட்டு மன்னர் தேர்வு செய்யப்படுவார்" என்பதே
அது.
அதே நாட்டில் முருகன். கண்ணன் என்ற இரு ஏழை விவசாயிகள் இருந்தனர், முருகன் மிகுந்த தன்னம்ம்பிகை உள்ளவன் , கண்ணன் மிகுந்த கோழை.
அடிக்கடி அவர்களுக்குள் விவாதம் நடக்கும், அப்போதெல்லாம் கண்ணன் சொல்வான் ," முருகா, நீதான் மிகுந்த தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ளவனாச்சே, எங்கே இந்த வருடம் நீ மன்னராகி. அடுத்த வருடம் உயிரோடு வா! பார்ப்போம்!" என்றான்
அப்போது முருகன் சொல்வான், " கண்டிப்பாக என்னால் முடியும், செய்து காட்டுகிறேன்" என்று.
அந்த நாளும் வந்தது . சொன்னபடியே முருகன் தன சுய விருப்பத்தின் பேரில் மன்னரானான். மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்தான், எல்லோரும் முருகனை புகழ்ந்தார்கள்.
இதற்கு முன்னர் வந்த மன்னர்கள் எல்லாம் "ஒருவருடம் மட்டுமே உயிரோடு இருக்க போகிறோம். அதனால் நன்கு அனுபவித்துவிட்டு சாவோம் !" என்று சுயநலமாக ஆட்சி செய்து மக்களை மறந்து விட்டிருந்தனர்.
முதன் முதலாக மக்கள் நலன்மேல் அக்கறை கொண்ட ஒரு அரசன் கிடைத்ததற்கு மக்கள் மகிழ்ந்தனர்.அதனால் மக்கள் அனைவரும் முருகன் மீது மிகுந்த மரியாதையை கொண்டு அவனுக்காக கடவுளை வேண்டினர்.
ஒரு வருடம் முடிவுக்கு வந்தது, முருகன் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் , நல்ல ஆடம்பரமான உடையுடுத்தி சந்தோஷமாக தேரில் ஏறி அமர்ந்தான்.
அவனது நண்பன் கண்ணன் அருகில் வந்தான், " நண்பா , என்னை மன்னித்துவிடு, என்னால்தானே உனக்கு இந்த நிலைமை !" என்று கையைப்பிடித்து அழுதான். அதற்கு முருகன், " நண்பா, கவலைப்படாதே, உன் கவலைகள் விரைவில் தீரும் !" எனச்சொல்லி புறப்பட ஆயத்தமானான். கண்ணனுக்கு ஒன்றும் புரியாமல் அழுத்தவாறே விடைகொடுத்தான்.
இதற்கு முன்னர் வேடிக்கை பார்க்கவே மக்கள் கூட்டம் வந்தது, முதன் முறையாக மன்னரின் பிரிவுக்காக வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் மல்க நின்றிருந்தனர், ஆனாலும் முருகன் முகத்தில் எந்தவிதமான கவலையும் இல்லாமல் சந்தோஷத்தோடு சென்று கொண்டிருந்தான்.
தேரோட்டிக்கு மிகுந்த குழப்பம், இதற்கு முன்னர் வந்த மன்னரெல்லாம் கண்ணீர் மல்க தன்னை எங்கேயாவது கண் காணாத இடத்தில் விட்டுவிடுமாறு கெஞ்சி காலில் விழுந்ததையே பார்த்தவனுக்கு இது மிகவும் ஆச்சர்யமாக இருந்த்தது.
இதற்கு மேலும் பொறுக்க முடியாமல், " மன்னா, தாங்கள் சாக போகிறேர்கள், இருந்தாலும் உங்களிடம் அது குறித்த அச்சஉணர்வு ஏதுமில்லையே ! எப்படி?" என வினவினான்.
அப்போது முருகன் பலமாக வாய் விட்டு சிரித்தான் ," சாகப்போகின்றேனா ?! யார் சொன்னது ? நான் வாழப்போகிறேன் " என்று சொல்லி மீண்டும் பலமாக சிரித்தான்.
தேரோட்டிக்கு மேலும் குழப்பம் அதிகமாகிவிட்டது. " எப்படி மன்னா? ... எனக்கு விளங்க வில்லையே !" என்றான். அப்போது முருகன் தனது சிரிப்பின் காரணத்தை சொல்ல ஆரம்பித்தான்....
அது என்ன ரகசியம்னு ? அடுத்த பதிவு வரை பொறுத்திருந்து பாருங்கள்...
No comments:
Post a Comment
தங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன